×

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் மஹோதய தீர்த்தவாரி உற்சவம்

மாமல்லபுரம், பிப்.5: மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் மஹோதய தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது.108 வைணவத் திருத்தலங்களில் 63வது தலமாக உள்ள தலசயனப் பெருமாள் கோயில் மாமல்லபுரத்தில் உள்ளது. இக்கோயிலில் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை மஹோதய தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீர்த்தவாரி உற்சவம் திருவோண நட்சத்திரத்தில் தை அமாவாசை தினத்தன்று வந்ததால் வெகு சிறப்புடன் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலசயனப் பெருமாள் கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகவும், ஆதிவராகப் பெருமாள், பூதத்தாழ்வாருடனும் பக்தர்களுக்கு கடற்கரை வரை சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும், உடன் வந்த சக்கரத்தாழ்வாருக்கு கடல் நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க கடலில் இறங்கி புனித நீராடினர். இதைத்தொடர்ந்து பக்தர்களின் பஜனை கோஷத்துடன் தலசயனப் பெருமாள் தனது கோயிலுக்கு திரும்பினார்.இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர்கள் வெங்கடேசன், குமரன், ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mahodaya Theerthari ,festival ,Mamallapuram Thalassayana Perumal ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!